வங்கிகளில் நகை கடன் இரு மடங்காக அதிகரிப்பு


வங்கிகளில் நகை கடன் இரு மடங்காக அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 May 2021 1:29 AM IST (Updated: 22 May 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

முழுஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளில் நகை கடன் அதிகரித்துள்ள நிலையில் தனிநபர் கடன் வழங்க வங்கி நிர்வாகத்தினர் தயக்கம் காட்டும்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

விருதுநகர்,
முழுஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளில் நகை கடன் அதிகரித்துள்ள நிலையில் தனிநபர் கடன் வழங்க வங்கி நிர்வாகத்தினர் தயக்கம் காட்டும்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தொடர்ந்து கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 இந்த ஊரடங்கால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று கட்டுமான துறையும் முடங்கியுள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமைப்பு சார்ந்த துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களும் தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகரிப்பு
 இந்நிலையில் வங்கிகளில் பொது மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் அன்றாட செலவுக்கு பணம் தேவைப்படும் நிலையில் வேறு வழியின்றி நகை கடன் வாங்க வங்கியை நாடிச் செல்லும் நிலை உள்ளது.
 கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் வங்கிகளில் நகை கடன் 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு அதிகவட்டி வருமானம் வரும் நிலை உள்ளது. தனிநபர் கடன் வழங்க வங்கிகள் தயக்கம் காட்டும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தனிநபர் வருமானம் குறைந்துள்ள நிலையில் கடன் பெற்றாலும் தவணை கட்டுவதற்கு சிரமப்படும் நிலை ஏற்படும் என்பதால் வங்கி நிர்வாகத்தினர் தனிநபர் கடன் வழங்குவதை முற்றிலும் தவிர்ப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது கல்விக்கடன் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. தனிநபர்கடனும் 37 சதவீதமாக குறைந்துள்ளது.
 நிலுவைத்தொகை 
மேலும் ஏற்கனவே பெற்ற கடன்தொகைக்கும் தற்போதுள்ள நிலையில் போதிய வருமானம் இல்லாததால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவணைத்தொகையை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டை விட தற்போது நிலுவைத்தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தாலும் அந்த சலுகைகளும் குறிப்பிட்டகாலக்கெடுவிற்குள் வழங்கப்படாத நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 எனவே சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுக்கான சலுகை திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தும் நிலை உள்ளது.
வலியுறுத்தல் 
 இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்கள் செயல்படவும், விவசாய பணிகள்தடையில்லாமல் நடைபெறவும் உரியஅனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 மேலும் மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் கடன் தவணைத்தொகை களை கட்ட மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story