மத்திய பிரதேசத்தில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயில் மூலம் 2,676 டன் கோதுமை வந்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயில் மூலம் 2,676 டன் கோதுமை கொண்டுவரப்பட்டது.
திருச்சி,
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு சரக்கு ரெயில் மூலம் 2,676 டன் கோதுமை கொண்டுவரப்பட்டது.
அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தினமும் 1,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், சராசரியாக 13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பித்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகையால் மத்திய அரசு மூலம் பிரதம மந்திரி கரிப் யோஜனா திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு தலா 5 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இத்திட்டத்தை இந்திய உணவு கழகம் செயல்படுத்தி வருகிறது.
2,676 டன் கோதுமை வருகை
இத்திட்டத்தின்படி, திருச்சி மாவட்டத்திற்கு ரேஷன் கடைகள் மூலம், ஒரு கார்டுக்கு தலா 5 கிலோ வீதம் கோதுமை வழங்கப்படுகிறது. இதற்காக, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 42 வேகன்களில் 2,676 டன் கோதுமை நேற்று காலை திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டிற்கு வந்தது.
அதனை திருச்சியில் உள்ள இந்திய உணவுக்கழக மேலாளர் அய்யாத்துரை, மத்திய உணவுத்தானிய சேமிப்பு கிடங்கு சூப்பிரண்டுகள் ரமேஷ், கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் இறக்கப்பட்டு, பாதுகாப்பாக திருச்சி கே.கே.நகரில் உள்ள உணவு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
1,300 டன் யூரியா
இதுபோல தூத்துக்குடியில் இருந்து நேற்று சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் 1,300 டன் யூரியா உரமூட்டைகள், திருச்சி குட்ஷெட்டிற்கு வந்தது. அவை லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களில் உள்ள உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டன.
Related Tags :
Next Story