கொரோனா பரவலை தடுக்க சாலைகளில் தங்கி இருப்போருக்கு முகாம்கள் அமைக்கப்படுமா?


கொரோனா பரவலை தடுக்க சாலைகளில் தங்கி இருப்போருக்கு  முகாம்கள் அமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 22 May 2021 1:53 AM IST (Updated: 22 May 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சாலைகளில் தங்கி இருப்பவர்களுக்கு முகாம்கள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

ஈரோட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சாலைகளில் தங்கி இருப்பவர்களுக்கு முகாம்கள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சாலையோர வாசிகள்
ஈரோடு மாநகர் பகுதியில் வீடுகள் இல்லாமல் சாலையில் தங்கி இருந்து பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் உள்ளனர். வேலைகளுக்கு செல்லாமல் யாசகம் எடுத்து அன்றாட பிழைப்பு நடத்துபவர்களும் சாலையோர வாசிகளாகவே இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சாலையோரத்தில் வசிப்பவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பல நல்ல உள்ளம் கொண்ட பொதுமக்கள், தொண்டு அமைப்பினர் அவர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். அதே நேரம் அவர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சாலைகளில் சுற்றி வருவதும், அங்கேயே படுத்துக்கொள்வதுமாக இருக்கிறார்கள்.
ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கட்டுப்படுத்த முடியாததாக மாறி விடும். எனவே சாலையோர மக்கள் கடந்த முறை முகாம்களில் வைக்கப்பட்டதுபோன்று முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தனி முகாம்
இதுபற்றி செல்வா சேரிடபிள் அறக்கட்டளை நிறுவனர் ஜெ.ஜே.பாரதி கூறியதாவது:-
சாலைகளில்   வசிக்கும்  மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. அவர்கள் புழுதியில் கிடக்கிறார்கள். தற்போது எந்த வேலையும் இல்லாமல் பொருளாதார வாய்ப்பு இல்லாமல் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். உடனடியாக அவர்கள் தனி முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
முகாம்களை நடத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன. உணவு அளிக்க நல்ல தியாக உள்ளம் படைத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த முகாம்கள் அமைப்பதன் மூலம் உணவு வழங்க, உணவு பெற என்று சாலைகளில் சுற்றுபவர்களையும் தடுக்க முடியும். நோய் பரவலையும் தடுக்க முடியும்.
வறுமை
இதுபோல் அன்றாட கூலித்தொழில்களுக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்த பல வீடுகளில் வறுமை தலைகாட்ட தொடங்கி உள்ளது. வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வந்து வாடகை வீடுகளில் வசித்து வரும் ஏராளமானவர்கள் ரேஷன் கார்டுகள் இன்றி இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு வழங்கிய முதல் கட்ட தொகை ரூ.2 ஆயிரம் கிடைத்து இருக்காது. இந்த சூழலில் கடன் வாங்கவும் முடியாது.
எனவே இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து தினசரி உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நல்ல மனம் படைத்தவர்களும், சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனத்தினரும் உணவுப்பொருட்கள் வழங்க முன்வர வேண்டும். வேலை இல்லை, கடன் தொல்லை என்ற மன அழுத்தங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story