மாஞ்சோலை மலைப்பாதையில் டயர் வெடித்து லாரி கவிழ்ந்ததில் 2 பேர் பலி; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேர் படுகாயம்


மாஞ்சோலை மலைப்பாதையில் டயர் வெடித்து லாரி கவிழ்ந்ததில் 2 பேர் பலி; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 May 2021 2:46 AM IST (Updated: 22 May 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

மாஞ்சோலை மலைப்பாதையில் டயர் வெடித்து லாரி கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

அம்பை, மே:
மாஞ்ேசாலை மலைப்பகுதியில் நேற்று இரவு டயர் வெடித்து லாரி கவிழ்ந்த கோர விபத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

மின்கம்பங்கள் அமைக்கும் பணி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை மலைப்பகுதிக்கு மேல் கோதையாறு பகுதியில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
அதன்படி, நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லாரியில் வேலைக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு மேல் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மூலச்சியை சேர்ந்த பெருமாள் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

லாரி கவிழ்ந்தது

மாஞ்சோலையை அடுத்த முணுமுடங்கி என்ற மலைப்பாதையில் இரவு 7 மணியளவில் வந்தபோது லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதில் லாரி நிலைதடுமாறி ரோட்டோரம் கவிழ்ந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் மற்றும் அம்பை தீயணைப்பு நிலையத்தினரும் அங்கு விரைந்து சென்றனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
மேலும், இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாஞ்சோலை, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்களுடைய வாகனங்களை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் அங்கு சென்றனர். 108 ஆம்புலன்சுகளும் விரைந்தன. மலைப்பாதை என்பதால் ஒவ்வொரு வாகனங்களாக சென்று வந்தன.

2 பேர் பலி

இந்த கோர விபத்தில் தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பூதப்பாண்டி (வயது 32), மணிமுத்தாறை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பொன்னுத்துரை (36) ஆகிய 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மேலும், தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன், முத்து, காந்திமதிநாதன், கீழஏர்மாள்புரத்தை சேர்ந்த நயினார், சிவந்திபுரத்தை சேர்ந்த சியாம் சுந்தர், மணிமுத்தாறை சேர்ந்த சட்டநாதன், அய்யப்பன், பிரவின், சிங்கம்பட்டியை சேர்ந்த தளவாய் சாமி, நல்லையா ஆகியோர் உள்பட 30 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் மூலம் அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். உயிருக்கு போராடியவர்கள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் அம்பை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இரவு குவிந்தனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது. விபத்து குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story