பவானிசாகர் அருகே தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய வாலிபர்கள்
பவானிசாகர் பகுதியில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை வாலிபர்கள் தடுத்து நிறுத்தினர். கொரோனா பரவும் எனக்கூறி டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர் பகுதியில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களை வாலிபர்கள் தடுத்து நிறுத்தினர். கொரோனா பரவும் எனக்கூறி டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று பீதி
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் வாகனங்களில் அந்தந்த பகுதிகளுக்கு சென்று தொழிலாளர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என்று அந்த பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆட்களை ஏற்றிச்சென்ற வாகனங்கள்
இந்த நிலையில் பவானிசாகர் பகுதியில் இருந்து நேற்று காலை 8.30 மணி அளவில் வழக்கம்போல் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனங்கள் தொட்டம்பாளையம் கிராமம் அருகே சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான வாலிபர்கள் அங்கு திரண்டனர்.
பின்னர் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து டிரைவர்களிடம் அவர்கள், ‘சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்குச் சென்று வருபவர்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வாகனங்களில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல் மீறப்படுகிறது. எனவே பவானிசாகர் சுற்றுவட்டார பகுதி கிராமப்பகுதிகளில் ஆட்களை வேலைக்கு அழைத்து செல்ல வாகனங்கள் இங்கு வரக்கூடாது’ எனக்கூறினர். இதனால் வாலிபர்களுக்கும், டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இறக்கிவிட்டனர்
அதன்பின்னர் டிரைவர்கள் வாகனங்களில் இருந்து ஆட்களை இறக்கி விட்டனர். பின்னர் அவர்கள் வாலிபர்களிடம், ‘பவானிசாகர் பகுதியில் இருந்து வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல இனி இங்கு வர மாட்டோம்’ என கூறினார்கள். அதைத்தொடர்ந்து வாகனங்களை அங்கிருந்து செல்ல வாலிபர்கள் அனுமதித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story