காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு 200 படுக்கை வசதியுடன் சிறப்பு மருத்துவ மையம்
கொரோனா நோய்த் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு உடனடியாக சிறப்பு சிகிச்சை அளிக்க செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 200 படுக்கை வசதியுடன் தனி சிறப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர், இணைவேந்தர் பி.சத்தியநாராயணன் ஏற்பாட்டில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் எம்.பிளாக் பகுதியில் இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி இணை துணைவேந்தர் ஏ.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் 100 படுக்கை ஆங்கில முறை சிகிச்சைக்காகவும், 100 படுக்கை சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ சிகிச்சைக்காகவும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு மையங்களில் போதுமான டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுடன் செயல்படும். இங்கு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையுடன் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.இதற்கான தொடக்க நிகழ்ச்சி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. இதில் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் (பொறுப்பு) எஸ்.பொன்னுசாமி, எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஏ.சுந்தரம், எஸ்.ஆர்.எம். பல் மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.
மேற்கண்ட தகவல் எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story