சேலத்தில் 10 நாட்களில் கொரோனாவுக்கு 122 பேர் பலி- சுடுகாட்டில் தொடர்ந்து எரியும் பிணங்கள்
சேலத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனாவுக்கு 122 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சுடுகாட்டில் தொடர்ந்து பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.
சேலம்:
சேலத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனாவுக்கு 122 பேர் பலியாகி உள்ளனர். இதனால் சுடுகாட்டில் தொடர்ந்து பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.
10 நாளில் 122 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டுகளில் நோயாளிகள் நிரம்பி வழிவதால் ஆம்புலன்சிலேயே சிகிச்சை பெறும் நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு தினமும் பலர் இறந்து வருகின்றனர். சுகாதாரத்துறை தகவல் படி, கடந்த 11-ந் தேதி 18 பேர், 12-ந் தேதி 10 பேர், 13-ந் தேதி 6 பேர், 14-ந் தேதி 18 பேர், 15-ந் தேதி 12 பேர், 16-ந் தேதி 7 பேர், 17-ந் தேதி 9 பேர், 18-ந் தேதி 16 பேர், 19-ந் தேதி 15 பேர், 20-ந் தேதி 11 பேர் என கடந்த 10 நாட்களில் 122 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தொடர்ந்து எரியும் பிணங்கள்
இதனால் சேலம் மாநகரில் கொரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்யப்படும் சீலநாயக்கன்பட்டி, செவ்வாய்பேட்டை, கன்னங்குறிச்சி ஆகிய சுடுகாடுகளில் தொடர்ந்து பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 15-ந் தேதி 15 உடல்களும், 16-ந் தேதி 15 உடல்களும், 17-ந் தேதி 18 உடல்களும், 18-ந் தேதி 20 உடல்களும், 19-ந் தேதி 22 உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர புறநகரில் உள்ள சுடுகாடுகளிலும் உடல்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.
அரசு ஆஸ்பத்திரி மற்றும் சுடுகாடுகளில் மரண ஓலங்கள் தான் அதிகளவு கேட்கின்றன. இதனிடையே இறப்பு எண்ணிக்கை அதிகமாகி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story