கொடைக்கானல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால், அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால், அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொட்டித்தீர்த்த கனமழை
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது கனமழை, சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நகரை சுற்றியுள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே நகரில் கருமேக கூட்டங்கள் சூழ்ந்தபடி இருந்தது.
இதற்கிடையே மதியம் 1 மணி அளவில் கொடைக்கானலில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழை சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
மேலும் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மின்கம்பிகளை சரிசெய்து மின்சாரம் வழங்கினர். பலத்த மழையால் ஒருசில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது.
தொடர் மழையால் கொடைக்கானல் நட்சத்திர ஏரி நேற்று நிரம்பியது. இதைத்தொடர்ந்து ஏரியில் இருந்து உபரிநீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பலத்த மழையால் நகரை ஒட்டியுள்ள பியர்சோழா அருவி உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Related Tags :
Next Story