நிலக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் பலி


நிலக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் பலி
x
தினத்தந்தி 22 May 2021 9:30 PM IST (Updated: 22 May 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்துபோனார்.

நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்துபோனார். 
தனியார் நிறுவன மேலாளர்
மதுரையை அடுத்த கடச்சனேந்தலை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் மோகன்பாபு (வயது 24). இவர் சென்னையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் தற்போது ஊருக்கு வந்திருந்தார். 
இந்தநிலையில் நேற்று காலை மோகன்பாபு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தில் வசிக்கும் தனது மாமா ராமசாமி என்பவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து, ராமசாமியின் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு மோகன்பாபுவும், அவரது நண்பர்களும் ஆனந்தமாக குளித்தனர். பின்னர் குளித்து முடித்தவுடன் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் இருந்து படி வழியாக மேலே ஏறி வந்தனர். 
கிணற்றில் மூழ்கி பலி
இறுதியாக மோகன்பாபு கிணற்றில் இருந்து மேலே ஏறினார். அப்போது எதிர்பாராதவிதமாக மோகன்பாபு படியில் இருந்து வழுக்கி கிணற்றுக்குள் விழுந்தார். இதில் கிணற்றின் பக்கவாட்டு சுவரில் அடிபட்டு அவர் காயத்துடன் கிணற்றில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக கிணற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர்களால் மோகன்பாபுவை மீட்க முடியவில்லை. 
இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றில் மூழ்கிய மோகன்பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடலுக்கு பின்பு அவர் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story