விழுப்புரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்


விழுப்புரம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 22 May 2021 9:34 PM IST (Updated: 22 May 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பகுதியில் பெய்த பலத்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டமாகும். இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் நெல், கரும்பு, உளுந்து, மணிலா, கம்பு, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர் வகைகளும், பல்வேறு தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள், பழ வகைகளும் பயிர் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை வேளையில் பலத்த காற்றுடனும், இடி-மின்னலுடனும் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையும் பலத்த மழை பெய்தது. இரவிலும் இந்த மழை நீடித்தது. நள்ளிரவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

நெற்பயிர்கள் சேதம்

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக பெரும்பாக்கம், கோனூர், சின்னகுச்சிப்பாளையம், பெரியகுச்சிப்பாளையம், நல்லரசன்பேட்டை, வளவனூர், சிறுவந்தாடு, பஞ்சமாதேவி, பூவரசங்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் நனைந்து வீணாகியுள்ளது.

விவசாயிகள், அறுவடை செய்வதற்காக நெல் அறுக்கும் எந்திரத்துடன் வயல்வெளியில் தயார் நிலையில் நின்றுயிருந்த சூழலில் திடீரென பெய்த இந்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனர். மழையினால் சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் துறையினர் கணக்கிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story