புதுச்சேரியில் புதிய பேரிடர் பாதிப்பு 20 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஆஸ்பத்திரியில் அனுமதி


புதுச்சேரியில் புதிய பேரிடர் பாதிப்பு 20 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 22 May 2021 9:44 PM IST (Updated: 22 May 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் புதிய பேரிடராக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுச்சேரி, 

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
புதுச்சேரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. அதேபோல் உயிர்ப்பலியும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் கொரோனா பாதித்தவர்களை கருப்பு பூஞ்சை எனும் புதிய கொடிய நோய் தாக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த நோய் தாக்கம் தற்போது தமிழகம், புதுச்சேரியிலும் புகுந்து மக்கைள கலக்கமடைய வைத்துள்ளது.

புதுவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் உறுதிபடுத்தும்விதமாக தகவல் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை புதுச்சேரிக்கு வழங்கி உள்ளது. அதை கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தார்.

இதில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், இயக்குனர் மோகன் குமார், டாக்டர் ஸ்ரீராமுலு, உலக சுகாதார நிறுவன முதுநிலை மருத்துவர் சாய்ராபானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம். இதுதவிர கொரோனா தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

புதுவையில் தொற்று பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்க பொதுமக்கள் உதவலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட முதல்-அமைச்சரிடம் பேசி உள்ளேன்.

கொரோனாவை தொடர்ந்து தற்போது கருப்பு பூஞ்சை நோய் அதிக அளவில் பரவி வருகிறது. புதுவையில் தற்போது அரசு ஊழியர் உள்பட 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென்று கண்களில் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை கருப்பு பூஞ்சைக்கான நோய் அறிகுறியாகும். இதுபோல் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள புதுவையில் இளைஞர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். கொரோனாவை தடுக்கும் ஆயுதம் தடுப்பூசி தான். கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தாமாக மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக டாக்டர்களை அணுக வேண்டும்.

முழு ஊரடங்கு மட்டுமே கொரோனாவை தடுத்து விடாது. முழு ஊரடங்கால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். எனவே அத்தகைய நிலைக்கு செல்லாமல் இருக்க மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story