கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை மளிகை காய்கறி கடைகள் திறக்கப்பட்டன


கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை மளிகை காய்கறி கடைகள் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 22 May 2021 10:35 PM IST (Updated: 22 May 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் நேற்று மாலை மளிகை காய்கறி கடைகள் திறக்கப்பட்டன

கள்ளக்குறிச்சி


ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா முழு ஊரடங்கும், இதர நாட்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை தவிர இதர நாட்களில் மளிகை, காய்கறி உள்ளிட்ட சில கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டதால் கடைவீதிகள், மார்க்கெட்டுகள் பரபரப்புடன் காணப்பட்டது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

முதல்-அமைச்சர் அறிவிப்பு

இந்த நிலையில் நாளை(திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதிவரை தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ளும்வ கையில் நேற்று(சனிக்கிழமை) இரவு 9 மணிவரையிலும், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் அனைத்து கடைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாகவும், தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஓடும் எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் அறிவித்தார்.
இதையடுத்து கள்ளக்குறிச்சியில் நேற்று காலை 10 மணிஅளவில் மூடப்பட்ட கடைகளை வியாபாரிகள் மதியம் திறந்தனர். மளிகை, காய்கறி, பழக்கடைகள் மட்டும் இன்றி ஜவுளி, நகை மற்றும் பாத்திரம் உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. ஆனால் மளிகை கடையில் மட்டும் பொதுமக்கள் கூட்டத்தை காண முடிந்தது. மற்ற கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. 

பஸ்நிலையம் வெறிச்சோடியது 

அதேபோல் கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் சென்னை, சேலத்துக்கு செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் வந்தன. ஆனால் பஸ் நிலையத்துக்கு பயணிகள் யாரும் வராததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்கு பின்னர் பஸ்கள் அனைத்தும் பயணிகள் இன்றி காலியாக புறப்பட்டு சென்றன. 
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டு சென்றதால் வாகன போக்குவரத்துடன் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பரபரப்புடன் காணப்பட்டது. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றதை காண முடிந்தது.

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பகுதியில் வழக்கம் போல் காலை 10 மணிக்கு மூடிய கடைகளை மதியம் 2 மணிக்கு மேல் வியாபாரிகள் திறக்க ஆரம்பித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு பொதுமக்கள் கூட்டம் இல்லாததால் பெரும்பாலான கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்லாததால் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்ததை பார்க்க முடிந்தது.
அதேபோல் சங்கராபுரம், தியாகதுருகம், மூங்கில்துறைப்பட்டு, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் நேற்று மாலை மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகள் திறந்து இருந்தன. பஸ்களும் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டன.







Next Story