அனுமதியின்றி களிமண் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல்


அனுமதியின்றி களிமண் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 May 2021 11:55 PM IST (Updated: 22 May 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி களிமண் ஏற்றி வந்த 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே அனுமதியின்றி களிமண் ஏற்றி வந்த 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 
டிரைவர்கள் தப்பி ஓட்டம்
நீடாமங்கலம் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆறுகளில் மணல் அள்ளுவது, ஏரி, குளங்கள், ஆற்றுபடுகைகளில் களிமண் அள்ளுவது போன்றவைகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து திருவாரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் நீடாமங்கலம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு லாரிகளை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
இந்தநிலையில்  நீடாமங்கலம் பகுதியில் நேற்று திருவாரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் மாரியம்மாள் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அய்யம்பேட்டையில் இருந்து அனுமதியின்றி ஏரிமண்(களிமண்) ஏற்றி வந்த 4 லாரிகளை மறிக்க முயன்றார். இதனை பார்த்த டிரைவர்கள் 4 லாரிகளையும் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 
லாரிகள் பறிமுதல் 
இதையடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாள் 4 லாரிகளையும் பறிமுதல் செய்து நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர்களை வலைவீசி தேடிவருகிறார்.

Next Story