திருச்சியில் அடுத்த தொற்று: 6 பேருக்கு கருப்பு பூஞ்சை அறிகுறி
திருச்சியில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
திருச்சி,
திருச்சியில் 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் புதிதாக கருப்பு பூஞ்சை நோய் என்ற தொற்று உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நோயின் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன.
கருப்பு பூஞ்சை கொடிய நோய் என்பதில் ஐயமில்லை. அதே நேரம் அது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றக்கூடிய நோயோ, குணப்படுத்த முடியாத நோயோ அல்ல.
கவனமுடன் இருக்க வேண்டும்
கண் பார்வையைப் பறிப்பது மட்டுமின்றி, மூளைக்கும் வேகமாகப் பரவி உயிரையும் பறிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படாதவர்களும் கூட, சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
கண்களில் வீக்கம், வலி, கண்கள் சிவத்தல், பார்வைத் திறன் குறைதல், முகத்தில் வீக்கம், மூக்கிலிருந்து குருதி கலந்த திரவம் வடிதல் ஆகியவை கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் ஆகும். இத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுகுவதன் மூலம் நோய் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்று சுகாதாரத்துறையினர் கூறுகிறார்கள்.
6 பேருக்கு கருப்பு பூஞ்சை
இதுதொடர்பாக திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்திலும் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு சிலரை பிடித்துள்ளது. அதன்படி, 6 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 5 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது ஆரம்ப கட்ட நிலையில்தான் உள்ளது. கவலைப்படும் நிலை இல்லை. அவர்களுக்கு உரிய சிகிச்சை ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்டு வருகிறது.
5 ஆயிரம் குப்பி மருந்து
கருப்பு பூஞ்சை நோய் தொற்றை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டால் குணப்படுத்தி விடலாம். முற்றிய நிலைக்கு சென்றுவிடாமல் பார்ப்பது அவசியம். இது ஒரு பூஞ்சை நோய்தான். பயப்படதேவையில்லை.
இந்த நோயை குணப்படுத்துவதற்காக பிரத்யேக மருந்து 5 ஆயிரம் குப்பிகள் சென்னையில் இருந்து வரவழைக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story