சோலை காடுகளில் ஆர்க்கிட் செடிகள் நடும் பணி


சோலை காடுகளில் ஆர்க்கிட் செடிகள் நடும் பணி
x
தினத்தந்தி 23 May 2021 12:33 AM IST (Updated: 23 May 2021 12:33 AM IST)
t-max-icont-min-icon

நாடுகாணி தாவரவியல் மைய சோலை காடுகளில் ஆர்க்கிட் செடிகளை நடும் பணி நடந்தது.

கூடலூர்

நாடுகாணி தாவரவியல் மைய சோலை காடுகளில் ஆர்க்கிட் செடிகளை நடும் பணி நடந்தது. 

தாவரவியல் மையம்

கூடலூர் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் நாடுகாணி தாவரவியல் மையம் உள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும் அரிய வகை ஆர்க்கிட் செடிகள் குடில்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 
மேலும் புதிய வகை தாவரங்களை உருவாக்கும் வகையில் திசு வளர்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது.

 இதனால் மாணவர்களின் கல்வி சுற்றுலா மையமாக திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய நிதி இல்லாததால் எந்தவித பராமரிப்பும் இன்றி தாவரவியல் மையம் மூடப்பட்டது. தற்போது சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆர்க்கிட் செடிகள்

இந்த நிலையில் உலக பல்லுயிர் தின விழாவையொட்டி கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் நாடுகாணி தாவரவியல் பூங்காவில் குடில்களில் 41 வகையான ஆர்க்கிட் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து 121 ஆர்க்கிட் செடிகளை சோலை காடுகளில் நடும் பணியில் நடந்தது.

நாடுகாணி வனச்சரகர் பிரசாத் தலைமையில் வன ஊழியர்கள் சோலை காடுகளில் உள்ள மரங்களில் ஆர்க்கிட் செடிகளை நட்டனர். மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி செடிகளும் நடப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ஆர்க்கிட் செடிகள் தனியாக வளரும் தன்மை உடையவை அல்ல. ஏதாவது மரங்களில் ஒட்டு செடியாக வளருகிறது. 
அழியும் தருவாயில் உள்ள அரியவகை ஆர்கிட் செடிகளை மீட்டு வனப்பகுதியில் நடப்பட்டுள்ளது என்றனர்.


Next Story