கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பெரம்பலூர்:
219 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 129 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 48 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 29 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 13 பேரும் என மொத்தம் 219 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 5,895 ஆக உயர்ந்துள்ளது. இதில் 43 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
4 பேர் பலி
இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டம் துங்கபுரத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அயன் பேரையூரை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணும், திருச்சி தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு கணபதி நகரை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், லப்பைகுடிக்காடு காயிதே மில்லத் தெருவை சேர்ந்த 62 வயதுடைய முதியவரும் என மொத்தம் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் 2,100 பேர்
மருத்துவமனைகளில் 3,748 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,100 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 48 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1,152 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று 337 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 19 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் 356 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 40,815 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி 2,370-ம், கோவேக்சின் தடுப்பூசி 300-ம் கையிருப்பில் உள்ளது. 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு போடுவதற்காக கோவிஷீல்டு தடுப்பூசி 6,900-மும், கோவேக்சின் தடுப்பூசி 1,200-ம் கையிருப்பில் உள்ளது.
Related Tags :
Next Story