விக்கிரமசிங்கபுரத்தில் பரபரப்பு; காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் மகனுடன் தர்ணா


விக்கிரமசிங்கபுரத்தில் பரபரப்பு; காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் மகனுடன் தர்ணா
x
தினத்தந்தி 23 May 2021 1:33 AM IST (Updated: 23 May 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் ஒருவர் தனது மகனுடன் கணவர் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

விக்கிரமசிங்கபுரம்,  மே:
விக்கிரமசிங்கபுரத்தில் காதல் கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தனது மகனுடன் கணவரது வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

இளம்பெண்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சிவந்திபுரம் நாராயண சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகள் ரம்யா (வயது 24). இவருக்கும், விக்கிரமசிங்கபுரம் மேலரதவீதி சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் வினிஷ் (29) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது. இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள். வினிஷ் சிவந்திபுரத்தில் டி.வி மெக்கானிக் கடை வைத்துள்ளார். தற்போது இவர்களுக்கு 1-ம் வகுப்பு படிக்கும் நித்திஷ் (6) என்ற மகன் இருக்கிறான்.

இந்தநிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுசம்பந்தமாக விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி ரம்யா நேற்று மதியம் தனது மகனுடன் கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது என்னையும், என் மகனையும் தனது கணவரோடு சேர்த்து வைக்க வேண்டும் என்று போலீசாரிடம் ரம்யா கூறினார். 

அதன்பேரில் போலீசார் ரம்யா மற்றும் அவரது கணவா் வினிஷ் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையம் வரச்சொல்லி விசாரணை நடத்தி வருகின்றனர். 6 வயது மகனுடன் கணவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story