பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு


பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 22 May 2021 8:46 PM GMT (Updated: 22 May 2021 8:46 PM GMT)

பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

பனவடலிசத்திரம், மே:
பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலியானான்.

10 வயது சிறுவன்

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள கருத்தானூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு சித்ரா என்ற மகளும், அனுதீப் (வயது 10) என்ற மகனும் உண்டு.
இதில் அனுதீப் தினமும் காலைக்கடன் கழிப்பதற்காக ஊருக்கு வெளிப்புறம் சென்று விட்டு, அங்குள்ள தோட்டத்து கிணற்றில் குளிப்பது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று அனுதீப் காலையில் வெளியே சென்றான். மதியம் வரையும் அவன் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

கிணற்றில் விழுந்து சாவு

இதையடுத்து பெற்றோர் தோட்டத்தில் உள்ளே கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு அனுதீப் காலணி கிடந்தது. இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் அனுதீப் உடலை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பனவடலிசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சிறுவன் அனுதீப் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

தேவர்குளம் அருகே உள்ள வடக்கு அச்சம்பட்டி ஊரைச் சேர்ந்தவர் சார்லஸ் மனைவி ஆனந்தி (23). இவர்கள் வடக்கு அச்சம்பட்டி ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தனர். ஆனந்திக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆனந்தி அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தி உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story