தர்மபுரி அகழ் வைப்பகத்தில் திருடிய வாலிபர் கைது - பழங்கால போர் வாள்கள், நாணயங்கள் பறிமுதல்


தர்மபுரி அகழ் வைப்பகத்தில் திருடிய வாலிபர் கைது - பழங்கால போர் வாள்கள், நாணயங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 May 2021 4:54 AM IST (Updated: 23 May 2021 5:08 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அகழ் வைப்பகத்தில் பழங்கால போர் வாள்கள், நாணயங்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி,

தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ஒன்றாக தர்மபுரி மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கற்கால கருவிகள், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி, பழங்கால போர் கருவிகள், நடுகற்கள், செப்பு மற்றும் பல்வகை உலோக நாணயங்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டறியப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரியவகை தொல்லியல் பொருட்கள் தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள தொல்லியல் அகழ் வைப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், மாணவ- மாணவிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த அகழ் வைப்பகத்தை பார்வையிடுவது வழக்கம்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக இந்த அகழ் வைப்பகத்துக்கு பார்வையாளர்கள் வருகை குறைந்தது. இந்த அகழ்வைப்பக தூய்மை பணிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ள தொல்லியல் பொருட்களை சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது 30 பழங்கால நாணயங்கள், பழங்கால மன்னர்கள் பயன்படுத்திய 3 வீரவாள், பதிவேடுகள் அடங்கிய கணினி ஆகியவை மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அகழ்வைப்பக பணியாளர்கள் இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது விலைமதிப்பற்ற அரியவகை நாணயங்கள், தொல்லியல் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது உறுதியானது. இதுதொடர்பான புகாரின்பேரில்  துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்ராயன், பெஞ்சமின், மகேஷ்குமார், ரஞ்சித் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்றது. விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 27) என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. தர்மபுரி பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அகழ் வைப்பகத்தில் இருந்து அவர் திருடிய பழங்கால நாணயங்கள், போர் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த திருட்டு தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்து தொல்லியல் பொருட்களை மீட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story