ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சிலேயே இறந்த கொரோனா நோயாளி - கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவலம்


ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சிலேயே இறந்த கொரோனா நோயாளி - கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவலம்
x
தினத்தந்தி 23 May 2021 4:54 AM IST (Updated: 23 May 2021 5:10 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் தற்போது வரை 8 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரையில் 175 பேர் பலியாகி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,144 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் 1,438 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும், 139 படுக்கைகள் ஐ.சி.யு. படுக்கைகளாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்தநிலையில் கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்த 34 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்சில் அவரது உறவினர்கள் நேற்று அழைத்து வந்தனர். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் காத்திருக்க கூறினார்கள். இதனால் காலை 8.30 மணி முதல் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்சில் அந்த நோயாளி காத்திருந்தார்.

இந்த நிலையில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் தீர்ந்ததால் அந்த நோயாளி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.
கடைசி நிமிடம் வரையில் படுக்கை கிடைக்கும், அவரை காப்பாற்றி விடலாம் என காத்திருந்த உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது.

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகள் இல்லாமல் தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தவித்து வருகிறார்கள். நேற்று மாலை ஆக்சிஜன் அளவு இறங்கிய 55 வயது ஆண் ஒருவர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். படுக்கை வசதி இல்லாமல் அவர் மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்திருந்தார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது உறவினர்கள் வேதனையுடன் கூறினார்கள்.

Next Story