முக்கிய சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி,
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய சாலை சந்திப்புகள்
பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டரும், அரசு நிலம் 6,836 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு ரூ.33 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதை தவிர சாலை பணிக்கு ரூ.34 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் வாகன போக்குவரத்து குறைந்து உள்ளது. இதை பயன்படுத்தி சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொள்ளாச்சி-உடுமலை ரோடு முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சியின் அடையாளங்கள்
பொள்ளாச்சி நகரில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிக்னல் இல்லாமல் வாகனங்கள் எளிதில் சென்று வருவதற்கு முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது.
இதற்காக காந்தி சிலை, சப்-கலெக்டர் அலுவலகம், தேர்நிலை திடல், நகராட்சி அலுவலகம், தபால் நிலையம், கந்தசாமி பூங்கா சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் ரவுண்டானா அமைக்கப்படுகிறது. இதற்காக மாதிரி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ரவுண்டானா பகுதியிலும் பொள்ளாச்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் காங்கயம் காளை, தென்னை மரங்கள் போன்ற உருவங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தற்போது ஊரடங்கில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதால் பஸ் நிலையம், காந்தி சிலை பகுதிகளில் சாக்கடை கால்வாய், சாலையின் மைய பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story