கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக ஏற்பாடு
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாக மாறிய குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், தொற்றால் பாதித்த குழந்தைகக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர்களின் குழந்தைகளை பராமரிக்க உறவினர்கள் இல்லாத பட்சத்தில் அவர்களை தற்காலிகமாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவன பராமரிப்பு இல்லத்தில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு, காட்பாடியில் உள்ள ஹோப் ஹவுஸ் பராமரிப்பு மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு 23 ஆண் குழந்தைகளையும், 10 பெண் குழந்தைகளையும் தங்க வைக்க முடியும்.
தொற்று பாதித்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு வேலூர் இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனையில் பிரத்யேகமாக 15 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய முடியும். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா 9 குழந்தைகள் இல்லங்களில் 120 குழந்தைகளும் மற்றும் அங்குள்ள பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொற்று காரணமாக தாய், தந்தையை இழந்து ஆதரவற்றவர்களாக மாறிய குழந்தைகள் தொடர்பாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை வழங்குதல் தொடர்பாகவும் பொதுமக்கள் சைல்டுலைன் எண் 1098 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் தொலைபேசி எண் 0416-2222310 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story