புயல் பாதிப்பு பகுதிகளை “ஹெலிகாப்டரில் பறந்தபடி அல்லாமல், களத்திற்கு சென்று ஆய்வு செய்கிறேன்” பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதிலடி
" ஹெலிகாப்டரில் பறந்தபடி இல்லாமல், களத்திற்கு சென்று புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறேன் " என பா.ஜனதாவின் விமா்சனத்துக்கு முதல்-மந்திரிக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்து உள்ளார்.
மும்பை,
அரபிக்கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்த டவ்தே புயல் மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டு உள்ளது. இந்த புயலுக்கு ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், மும்பை, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே புயலால் பாதிக்கப்பட்ட ரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அவர் புயலுக்கு சேதமான வேளாண் பயிர்கள் குறித்து 2 நாளில் மதிப்பீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக முதல்-மந்திரியின் இந்த பயணத்தை பா.ஜனதா விமர்சித்து இருந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், கொங்கனுக்கு 3 மணி நேரம் சுற்றுப்பயணத்தில், உத்தவ் தாக்கரே அரசியல் கருத்துகளை கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார். இதேபோல மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தாரேகர் 3 மணி நேரத்தில் முதல்-மந்திரியால் எப்படி வெள்ளப்பாதிப்புகளை புரிந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பி இருந்தார்.
பா.ஜனதாவின் இந்த விமர்சனத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் சிந்துதுர்க் மாவட்டம் மால்வான் பகுதியில் கூறும்போது, " எனது பயணம் 4 மணி நேரம் தான் இருந்தது என்றால் பரவாயில்லை. குறைந்தபட்சம் நான் களத்திற்கு சென்றாவது வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தேன். வெறும் புகைப்படங்களை எடுப்பதற்காக ஹெலிகாப்டரில் பறக்கவில்லை. நானே ஒரு புகைப்பட கலைஞன் தான். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை" என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்தபடி குஜராத்தில் டவ்தே புயல் பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதை குறிப்பிடும் வகையில் உத்தவ் தாக்கரே, பா.ஜனதாவினர் தனது மீது தெரிவித்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து உள்ளார்.
Related Tags :
Next Story