விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாயிகளுக்கு அனுமதிச்சீட்டு கலெக்டர் உத்தரவு


விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாயிகளுக்கு அனுமதிச்சீட்டு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 23 May 2021 8:19 PM IST (Updated: 23 May 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் விளை பொருட்களை கொண்டு செல்ல விவசாயிகளுக்கு அனுமதிச்சீட்டு வழங்க அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அரசு துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசியதாவது:-
இந்த ஊரடங்கு கால கட்டத்தில் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப்பொருட்களை அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று வினியோகம் செய்ய வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் காய்கறி பைகளை அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

அனுமதிச்சீட்டு

விவசாயிகளுக்கு விவசாய நிலங்களில் விளையும் வேளாண் விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு சேர்த்தல், அப்பொருட்களை வாகனங்கள் மூலம் வினியோகித்தல் ஆகிய அத்தியாவசிய நடைமுறைகளுக்கு ஏதுவாக, சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் விற்பனைத்துறை ஆகிய துறைகளின் மூலம் உரிய அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.
மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி இருப்பு நிலவரம் ஆகியவைகள் குறித்தும், நோய் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி பரிசோதனை மேற்கொள்வது குறித்தும் பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்களின் நலன் கருதி அரசால் தற்சமயம் ஊரடங்கு ஒருவார கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை பொதுமக்கள் முறையாக கடைபிடிப்பதை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதி செய்திடும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story