தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வு இல்லா ஊரடங்கை அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மாநகராட்சி ஆணையாளர் சரண்யாஅறி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் போலீஸ் துறை, அரசு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தளர்வு இல்லாத ஊரடங்கை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
அமைச்சர் கீதாஜீவன்
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறும் போது, முதல்-அமைச்சர் கொரோனா தொற்று பரவாமல் தடுத்து
மக்களை காப்பாற்றிட வேண்டும், கொரோனா தொற்று பரவலுக்கான தொடர் சங்கிலிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுத்து உள்ளார். தமிழகத்தில் சுமார் 16 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன்வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக சுமார் 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிதாக உருவாக்கப்பட்டும் வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையின் மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
அனுமதி சீட்டு
தளர்வு இல்லாத முழு ஊரடங்கின் போது, காய்கறிகடைகள், பழக்கடைகள், மாளிகை கடைகள் வைத்துள்ளவர்கள் தள்ளுவண்டி மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுவீடாக சென்று விற்பனை செய்வதற்கு அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் காய்கறிகளின் விலைப்பட்டியல் அன்றாடம் வெளியிடப்படும்.
மேலும் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ய செல்பவர்களுக்கும் மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்பட உள்ளது. அனுமதி சீட்டு வழங்கும் பணிகளில் போலீசார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் முறையாக செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிந்திட வேண்டும். மேலும் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். தளர்வில்லா ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும் போது, கொரோனா தொற்று நோயை தமிழகத்தில் இருந்து விரட்டுவதற்காகமுதல்-அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வருகிற ஒரு வாரம் தளர்வில்லா ஊரடங்கை அறிவித்து உள்ளார். ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை
அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கே கொண்டு சென்று வியாபாரிகள் விற்பனை செய்வதற்கும், விவசாய நிலங்களில் விளையும் வேளாண் விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள்மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு நிலவரம் மற்றும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்து நமது மாவட்டத்தில் இருந்து கொரோனா தொற்றை ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் மகளிர் திட்ட திட்ட இயக்குநர் (பொறுப்பு) லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர்கள் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதிபாலன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ரவிச்சந்திரன், சுகாதார பணிகள் துணைஇயக்குனர்கள் அனிதா (கோவில்பட்டி), போஸ்கோராஜா (தூத்துக்குடி), தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வித்யா, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் சுகந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story