சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கர்நாடக அரசு அறிவிப்பு


சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் கர்நாடக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 23 May 2021 9:24 PM IST (Updated: 23 May 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் தற்போது தினசரி சுமார் 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளில் 24 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர். இதுகுறித்து கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கர்நாடக சட்ட சேவைகள் ஆணைய நீதிபதிகள் நடத்திய விசாரணையில், சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் 24 பேர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தான் இறந்தனர் என்று தெரியவந்தது. அந்த விசாரணை அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர். அதற்கு அட்வகேட் ஜெனரல், சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறந்த 24 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்த நிலையில், கர்நாடக அரசு, கடந்த 3-ந் தேதி சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த 24 பேர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்காக ரூ.48 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.


Next Story