வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு, கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு,
இதுகுறித்து போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. ஆயினும் இதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதனால் மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் 3, 4 நாட்கள் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
கொரோனா பரவலை தடுக்கவும், அதன் சங்கலித்தொடரை துண்டிக்கவும் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும். தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.
அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவை விரைவாக கட்டுப்படுத்த முடியும். அரசின் வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை காலை 10 மணிக்கு வாங்கி கொண்டு வீடுகளுக்கு சென்றுவிட வேண்டும்.
இனி வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாதவர்களுக்கு கர்நாடகத்திற்குள் அனுமதி இல்லை. இது தொடர்பாக எல்லை மாவட்டங்களான பெலகாவி, பீதர், விஜயாப்புரா, கலபுரகி, மங்களூரு, உடுப்பி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது மத்திய அரசின் உத்தரவு. அதை நாங்கள் அமல்படுத்துகிறோம். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநிலத்தின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு, சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story