நாளை முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேட்டி


நாளை முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2021 9:45 PM IST (Updated: 23 May 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக நாளை(திங்கட்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதுடன், கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வருகிற 24-ந் தேதி வரை (அதாவது நாளை) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை 4 மணிநேரம் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதன் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி காலை வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவை கடுமையான அமல்படுத்தும்படியும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் போலீஸ் கமிஷனருக்கு, முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, பெங்களூருவில் 2-வது கட்ட ஊரடங்கு கடுமையாக இருக்கும் என்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஊரடங்கு உத்தரவை வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி வரை நீட்டித்து முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசின் உத்தரவை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். காலை 6 மணியில் இருந்து காலை 10 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 10 மணிக்கு பின்பு தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே சுற்றித்திரிய அனுமதி கிடையாது.

பெங்களூரு நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நகர் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பின்பு ஒவ்வொரு வாகனங்களையும் போலீசார் சோதனை நடத்துவார்கள். போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து சட்டம்-ஒழுங்கு போலீசாரும் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுவார்கள்.

2-வது கட்டமாக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தீவிரமாக பின்பற்றப்படும். அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதில், எந்த விதமான பாரபட்சமும் பார்க்கப்படாது. பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 24-ந் தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு நகர் முழுவதும் 24-ந் தேதியில் இருந்து ஜூன் 7-ந் தேதி காலை வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது என்.டி.எம்.ஏ. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காலை 10 மணிக்கு மேல் பொய் காரணங்களை கூறி, தேவையில்லாமல் சுற்றி திரிய அனுமதி கிடையாது. அவ்வாறு கூறினால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இன்று முதலே (அதாவது நேற்று) ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story