புதுச்சேரி சட்டமன்றம் அடுத்த வாரம் கூடுகிறது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கிறார்கள்
புதுச்சேரி சட்டமன்றம் அடுத்த வாரம் கூடுகிறது. அப்போது புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு கடந்த மே 2-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களில் புதிய அரசுகள் பதவி ஏற்றுக் கொண்டு விட்டன.
தேர்தல் முடிவில் புதுச் சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்த நிலையில் ரங்கசாமி மட்டும் கடந்த 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்தநிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் ரங்கசாமி சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப்போனது.
இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணனை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்து கவர்னருக்கு ரங்கசாமி பரிந்துரை செய்தார். ஆனால் 10 நாட்களாகியும் இதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தார்.
இதனால் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு தாமதமாகி வந்தது. ரங்கசாமியும் சிகிச்சை முடிந்து புதுச்சேரி திரும்பி தனது வீட்டில் தனிமையில் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் தற்காலிக சபாநாயகர் நியமனத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற செயலாளர் முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அதன்படி வருகிற 24 அல்லது 26-ந்தேதி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
அதன்பிறகு புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கும் தேதியை லட்சுமி நாராயணன் அறிவிப்பார். இது தொடர்பாக அவர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சட்டமன்றம் கூடும் தேதியை முடிவு செய்வார் என்று தெரிகிறது.
இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் சட்டமன்றம் கூடும் தேதியை முறைப்படி தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் வெளியிடுவார். அன்றைய தினம் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு அவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலும் அப்போது நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை முடிந்து திரும்பிய ரங்கசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திலாசுப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருப்பதுடன் அரசு கோப்புகளை கவனித்து வருகிறார்.
இன்றுடன் ஒருவாரம் முடிவதால் நாளை (திங்கட்கிழமை) சட்டமன்றத்துக்கு ரங்கசாமி வருவார் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அடிப்படையில் சட்டமன்றம் அடுத்த வாரம் கூடும் என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. இதையொட்டி சட்டமன்ற கூட்ட அரங்கு, முதல்-அமைச்சர் அறை உள்ளிட்ட கட்டிடங்கள், மின்விளக்குகளை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை சட்டமன்ற செயலாளர் முனுசாமி நேற்று ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story