கிராமத்திற்குள் வெளியாட்கள் வருவதை தடுக்க வேண்டும் ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரை
கிராமத்திற்குள் வெளியாட்கள் வருவதை தடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி
கிராமத்திற்குள் வெளியாட்கள் வருவதை தடுக்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
ஊராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க கிராம ஊராட்சி அளவிலான கொரோனா நோய் தடுப்பு குழு அமைக்க கோவை மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகைவேல் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தீவிர கண்காணிப்பு
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு குழு நியமிக்க வேண்டும். இந்த குழுவில் ஊராட்சி தலைவர், செயலாளர், கிராம நிர்வாக அதிகாரி, சுகாதார செவிலியர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டால் நியமிக்கப்பட்ட போலீஸ்காரர் ஆகியோர் இடம் பெற வேண்டும்.
இந்த குழுவில் உள்ளவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், வீடு வீடாக சென்று கொரோனா தொற்று கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிகிச்சை மையம்
மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம ஊராட்சி அளவிலான நோய் தொற்று சிகிச்சை மையம் ஏற்படுத்த அதற்கான இடத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
கொரோனா பரிசோதனைக்கு பிறகு டாக்டர்களால் பரிசோதிக்கப் பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வீட்டில் போதிய இட வசதி இல்லை என்றால் சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்க வேண்டும்.
தடுக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் இடத்தில் குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இந்த மையத்துக்கு வருபவர்களுக்கு உணவு பார்சல் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கடுமையான கட்டுப்பாடு மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிக்குள் தேவையற்ற வகையில் வெளியாட்கள் வருவதை தடுப்பதுடன், இங்கிருந்து யாரும் தேவையின்றி வெளியே செல்வதையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story