கூட்டுறவுத்துறை மூலம் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்


கூட்டுறவுத்துறை மூலம்  வாகனங்களில் காய்கறிகள் விற்பனை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 May 2021 11:07 PM IST (Updated: 23 May 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவுத்துறை மூலம் வாகனங்களில் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை:
வாகனங்களில் காய்கறிகள் விற்பனை
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. காய்கறிகள் வாகனங்கள் மூலம் வீடு, வீடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலை மூலம் வாகனங்களில் நடமாடும் காய்கறிகள் விற்பனை தொடக்க நிகழ்ச்சி கீழ 2-ம் வீதியில் நகர கூட்டுறவு பண்டகசாலையில் நேற்று நடைபெற்றது. 
இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விற்பனையை தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் கூறுகையில், ``பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் தரமாகவும் விலை குறைவாகவும் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறையின் மூலம் மாவட்டத்தில் 60 இடங்களில் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் காய்கறிகள் வினியோகம் செய்யப்பட உள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்கள் பகுதிகளிலேயே வழங்குவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது'' என்றார்.
இடங்கள் விவரம்
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், முத்துராஜா எம்.எல்.ஏ., கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணி நேரம் வரை வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 
அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் பிருந்தாவனம், மச்சுவாடி, திருக்கோகர்ணம், கலீப்நகர், அசோக்நகர் ஆகிய இடங்களிலும், டி.வி.எஸ். கூட்டுறவு பண்டகசாலை மூலம் தெற்கு 2-ம் வீதி, தெற்கு மெயின் வீதி, நிஜாம் காலனி, பெரியார்நகர், காமராஜபுரம் ஆகிய பகுதிகளிலும் வாகனங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
அறந்தாங்கி
இதேபோல குரும்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் குரும்பூண்டி, நாட்டாணி, தச்சன்குறிச்சி, மலையப்பட்டி, கல்லுப்பட்டி ஆகிய இடங்களிலும், அண்டகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் அண்டகுளம், ஆயவயல், புதுகுடியான்பட்டி, செம்மண்டாப்பட்டி, பெரியதம்பி உடையான்பட்டி ஆகிய பகுதிகளிலும், மலைக்குடிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மலைக்குடிப்பட்டி, ஈஸ்வரன் கோவில், தென்னம்பாடி, கட்டக்குடி, கோத்திராப்பட்டி ஆகிய இடங்களில் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். 
அறந்தாங்கி கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் பட்டுக்கோட்டை ரோடு, என்.ஜி.ஓ.காலனி, பெரியகடை வீதி, எல்.என்.புரம் ஆகிய பகுதிகளிலும், திருமயம் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் திருமயம் கோட்டைத்தெரு, சந்தைப்பேட்டை, ஏனப்பட்டி, குளத்துப்பட்டி, மணவாளங்கரை ஆகிய பகுதிகளிலும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.
ஆலங்குடி
ஆலங்குடி கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் கலிபுல்லாநகர், கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி, எஸ்.எஸ்.நகர், அண்ணாநகர் ஆகிய இடங்களிலும், பொன்னமராவதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் பொன்னமராவதி, திருக்களம்பூர், ஆலவயல், செம்பூதி, காரையூர் ஆகிய இடங்களிலும், தீயத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் ஆவுடையார்கோவில், அமரடக்கி, கடூர், பொன்பேத்தி, தீயத்தூர், நரசிங்கபுரம், செல்லனேந்தல், சத்திரப்பட்டி, தாளனூர், தியாட்டூர் ஆகிய இடங்களிலும், அம்மன்குறிச்சி கூட்டுறவு சங்கம் மூலம் கல்லம்பட்டி, நகரப்பட்டி, சங்கம்பட்டி, எடசம்பட்டி, மறவாமதுரை ஆகிய இடங்களிலும் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என புதுக்கோட்டை மண்டல இணைபதிவாளர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story