திருப்பத்தூர் மாவட்டத்தில் காரணமின்றி சுற்றினால் சிறைத் தண்டனை. போலீஸ்சூப்பிரண்டு எச்சரிக்கை


திருப்பத்தூர் மாவட்டத்தில் காரணமின்றி சுற்றினால் சிறைத் தண்டனை. போலீஸ்சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 23 May 2021 11:23 PM IST (Updated: 23 May 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு காலத்தில் காரணமின்றி சுற்றினால் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்
 திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார்  கூறியதாவது:-

சிறைத்தண்டனை

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபடுகிறார்கள். ஆந்திரா, கர்நாடக எல்லைப் பகுதிகள் 14 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 42 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணியனப்பு பணியில் ஈடுபடுவார்கள். நெடுஞ்சாலை ரோந்து பணியில் 14 வாகனங்களில் சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

18 மைக் இணைக்கப்பட்ட இரு சக்கர வாகனம் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மருத்துவ, அவசரத் தேவைக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். காரணங்கள் இன்றி வெளியே வருபவர்கள், ஊர் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்படும். இந்த செயலில் ஈடுபட்டால் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
இ-பதிவு

மாவட்ட எல்லைகளில் இ- பதிவு செய்தவர்கள் மருத்துவம், மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வயதானவர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கு மருத்துவ உதவிகள் செய்ய தன்னார்வலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் நியமிக்கப்பட்டு தேவையான உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அரசு கூறிய விதிமுறைகள், அறிவுரைகளை பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story