கொரோனா பரிசோதனை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்


கொரோனா பரிசோதனை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 May 2021 11:27 PM IST (Updated: 23 May 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை பகுதியில் கொரோனா பரிசோதனை முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வால்பாறை

வால்பாறை பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்கிறார்கள். 

ஆனால் அதன் முடிவுகள் வர 4 முதல் 5 நாட்கள் ஆகிறது. அதுவரைக்கும் பரிசோதனை மேற்கொண்டவர்கள், வெளியே சுற்றுகிறார்கள். 5 நாட்களுக்கு பின்னர் முடிவு வந்ததும், கொரோனா இருந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள். 

ஆனால் முடிவு உடனே தெரியாததால், பரிசோதனை மேற்கொண்ட வர்கள் வெளியே செல்லும்போது அவர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. இங்கு பெரும்பாலும்  தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள்தான் அதிகம். 

இதற்கிடையே தமிழக- கேரள எல்லை பகுதியில்  உள்ள மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் கேரள சுகாதாரத்துறையினர் அடிக்கடி கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

ஆனால் அவர்கள் முடிவை அதிகபட்சமாக 2 மணி நேரத்துக்குள் தெரிவித்து விடுகிறார்கள். இதனால் உடனே சம்பந்தப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. 

இதனால் உயிர்ச்சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. எனவே அதுபோன்று மாவட்ட சுகாதாரத்துறையினர் எடுக்கும் கொரோனா பரிசோதனை முடிவையும் உடனடியாக தெரிவித்தால் நன்றாக இருக்கும். 

அதற்கு மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்று வால்பாறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 


Next Story