காய்கறிகள், பழங்கள் நான்கு சக்கர வாகனங்களில் விற்பனை செய்யப்படும் - கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது 4 சக்கர வாகனங்களில் விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது 4 சக்கர வாகனங்களில் விற்பனை செய்யப்படும் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4 சக்கர வாகனங்களில்
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மூலம் நேரில் கொண்டு சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் பகுதிக்கு உட்பட்ட நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
அனுமதி சீட்டு பெற வேண்டும்
காய்கறிகள் பழங்களை நான்கு சக்கர வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்ய விருப்பமுள்ளவர்கள் தங்கள் வாகனத்திற்கான அனுமதிச் சீட்டினை தங்களது பகுதிக்கு உட்பட்ட நகராட்சி ஆணையாளர், பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
அனுமதி சீட்டு இல்லாமல் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் இருசக்கர வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி இல்லை.
முழு ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டுள்ள கடைகளின் பின்பக்க கதவு வழியாக வியாபாரம் செய்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இருசக்கர வாகனத்தில் செல்ல தடை
அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.
இந்த தொழிற்சாலையின் பணியாளர்களை அந்நிறுவனத்தின் பேருந்து அல்லது மினி வேன் மூலமாக மட்டுமே அழைத்து சென்று வர வேண்டும். இருசக்கர வாகனங்களில் தொழிலாளர்கள் பயணிக்க அனுமதி இல்லை.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொற்று பரவாமல் இருக்க உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story