இன்று முதல் முழு ஊரடங்கு எதிரொலி: கடைகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்
இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று, கடலூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது. இங்கு தனிமனித இடைவெளி எதையும் பின்பற்றாமல் பொது மக்கள் போட்டி போட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரம் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
மேலும் ஊரடங்கினால் பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் 2 நாட்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
கடைகள் திறப்பு
அதன்படி நேற்று 2-வது நாளாக அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. கடலூரில் லாரன்ஸ் ரோடு, நேதாஜி ரோடு, இம்பீரியல் ரோடு, பாரதி ரோடு, செம்மண்டலம் சாலை, வண்டிப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று காலை திறக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக மளிகை, காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
பெரும்பாலான கடைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளி எதையும் கடைபிடிக்காமல் கூட்டம், கூட்டமாக நின்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். ஒரு சில இடங்களில் மட்டும் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.
பொதுமக்கள் திரண்டனர்
அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டதால் நேற்று ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், உதிரிபாகங்கள் விற்பனை கடைகள், காலணி கடைகள், சலூன், செல்போன் கடைகள், பாத்திர கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டது.
இவை அனைத்திலும் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் ஆகியவை தற்காலிக இடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஆனால் நேற்று வழக்கமான இடங்களிலேயே வியாபாரிகள் காய்கறிகளை வைத்து விற்பனை செய்தனர். கடலூர் உழவர் சந்தையிலும் பொதுமக்கள் காலை முதலே திரண்டனர். அவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனர்.
ஆனால் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கூட்டத்தை அதிக அளவில் பார்க்க முடிந்தது. இதனால் நகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தது.
சிதம்பரம்
இதேபோல் சிதம்பரத்தில் உள்ள 4 வீதிகள் மற்றும் காய்கறி மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் 4 வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது.
இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், புதுப்பேட்டை, பெண்ணாடம், காட்டுமன்னார்கோவில், நெல்லிக்குப்பம், புவனகிரி உள்பட பல்வேறு இடங்களிலும் மளிகை, காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தபதை பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story