ஊரடங்கு தளர்வு எதிரொலியாக கரூர் உழவர் சந்தை, காமராஜ் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்


ஊரடங்கு தளர்வு எதிரொலியாக கரூர் உழவர் சந்தை, காமராஜ் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 23 May 2021 11:45 PM IST (Updated: 23 May 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வு எதிரொலியாக கரூர் உழவர் சந்தை, காமராஜ் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கரூர்
ஊரடங்கு தளர்வு
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. 
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரம் அதாவது 24-ந்தேதி முதல் வருகிற 31-ந் தேதி எந்த தளர்வும் இல்லாம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும். இதனால் 22-ந்தேதி, 23-ந்தேதி ஊரடங்கு தளர்வு என அறிவித்தது. இதனால் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் மாலை ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது. பஸ்கள் ஓரளவு இயங்கின. 
பொதுமக்கள் குவிந்தனர்
இந்தநிலையில் நேற்று காலை கரூர் நகராட்சிக்கு உட்பட்ட உழவர்சந்தை, காமராஜ் மார்க்கெட், தாந்தோணிமலை, காந்திகிராமம், வெங்கமேடு மளிகைகடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வாங்க அதிக அளவில் கூட்டம் கூடியது. 
 இவர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தங்களுக்கு தேவையான ெபாருட்களை போட்டி, போட்டி கொண்டு வாங்கி சென்றனர். இதனால் உழவர்சந்தை, மார்க்கெட் பகுதிகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. மேலும் இறைச்சி கடைகள், மீன் கடைகள் உள்ளிட்டவற்றிலும் கூட்டம் காணப்பட்டது. 
நகை கடைகள் திறக்கப்படவில்லை
கரூர் நகரப்பகுதிகளில் உள்ள ஒரு சில துணிக் கடைகள், கவரிங் நகைகடைகள், அரிசி கடைகள் ஆகியவை திறந்திருந்தன. நகைகடைகள் ஏதும் திறக்கப்பட வில்லை. இதனால் நகை வாங்க வந்த சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் ஆட்டோ, வாடகை கார்கள் இயங்கின. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்து வியாபாரம் நடந்தது.

Next Story