கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை


கடலூர்  அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓட்டம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 May 2021 11:59 PM IST (Updated: 23 May 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனா நோயாளி தப்பி ஓடி தலைமறைவானார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலூர், 


கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது வரை கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 220 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அனைத்திலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தப்பி ஓட்டம்

இந்நிலையில் கொரோனா தனி வார்டில் ஒரே பெயர் கொண்ட 2 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் கடலூர் கோண்டூரை சேர்ந்தவர், மற்றொருவர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில் கோண்டூரை சேர்ந்த நோயாளி குணமடைந்தார்.

 இதையடுத்து அவரை டாக்டர்கள் நேற்று முன்தினம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு நெல்லிக்குப்பத்தை சேர்ந்த நோயாளி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். இதனால் ஆஸ்பத்திரி ஊழியர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

வலைவீச்சு

இது பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து கடலூர் புதுநகர் போலீசாரிடமும், அங்கு உள்ள கிராம சுகாதார நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி சென்றுவிட்டார். 

அவர் எங்கு உள்ளார் என்பதை விசாரித்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கொரோனா நோயாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story