தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: ராசிபுரம் உழவர் சந்தைக்கு படையெடுத்த பொதுமக்கள்; காய்கறிகளின் விலை உயர்வால் அவதி


தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: ராசிபுரம் உழவர் சந்தைக்கு படையெடுத்த பொதுமக்கள்; காய்கறிகளின் விலை உயர்வால் அவதி
x
தினத்தந்தி 24 May 2021 12:03 AM IST (Updated: 24 May 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு ராசிபுரம் உழவர் சந்தைக்கு பொதுமக்கள் படையெடுத்தனர். காய்கறிகளின் விலை உயர்வால் அவர்கள் அவதியடைந்தனர்.

ராசிபுரம்:
உழவர் சந்தை
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை முதலே காய்கறி, மளிகை, இறைச்சி உள்ளிட்ட கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்தது. 
இதனிடையே ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை கொரோனா பரவல் காரணமாக கடந்த வாரம் அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு பொருட்களை வாங்க ராசிபுரம், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே படையெடுத்தனர். 
விலை உயர்வு
இதேபோல் ராசிபுரம் தினசரி மார்க்கெட்டிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், இறைச்சி, எலக்ட்ரிக்கல் கடைகளிலும் ஏராளமானோர் திரண்டனர். முழு ஊரடங்கின் போது காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் மூலம் பொதுமக்களின் வீதிகளுக்கே கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நேற்று பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க முண்டியடித்தனர். இதனால் வழக்கத்தை காட்டிலும் காய்கறிகள் விலை உயர்ந்து விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். சந்தையில் சமூக இடைவெளியின்றி விற்பனை நடைபெற்றதை பார்த்து சிலர் காய்கறிகளை வாங்காமல் திரும்பி சென்றனர்.
13½ டன் காய்கறிகள் விற்பனை
இதனிடையே உழவர் சந்தைக்கு நேற்று 13 டன் 495 கிலோ காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இவை ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 315-க்கு விற்பனையானது.
கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனையான பீன்ஸ் நேற்று ரூ.85-க்கும், ரூ.50-க்கு விற்பனையான கேரட் ரூ.55-க்கும், ரூ.45-க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.50-க்கும், ரூ.35-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.40-க்கும், ரூ.45-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ.50-க்கும் விற்பனையானது. 
இதேபோல் பீட்ரூட் ஒரு கிலோ ரூ.45-க்கும், மிளகாய் ரூ.50-க்கும், பாகற்காய் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story