நெல்லையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு; ஒரு கிலோ தக்காளி ரூ.90, கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்பனை
நெல்லையில் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது.
நெல்லை, மே:
நெல்லையில் காய்கறி விைல கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.90-க்கும், கத்தரிக்காய் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காய்கறிகள் விற்பனை
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு 1 வாரம் அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று அனைத்து கடைகளையும் திறந்து கொள்ளவும், பொது மக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையொட்டி நெல்லையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் நேற்று கடைவீதிகளுக்கு திரண்டு சென்றனர். குறிப்பாக காய்கறிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அரசே காய்கறிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறிஇருந்தாலும், பொதுமக்கள் முன்னேற்பாடாக ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கினார்கள்.
கிடுகிடு உயர்வு
நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட்டுகள், தற்காலிக காய்கறி கடைகள், மகாராஜநகர் உழவர் சந்தை, மேலப்பாளையம் உழவர் சந்தை பகுதி மற்றும் சாலையோர காய்கறி கடைகளில் பொதுமக்கள் காய்கறிகளை அதிகளவு வாங்கிச்சென்றனர்.
இதனால் நேற்று காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கேரட், தக்காளி, உருளை கிழங்கு, கத்தரிக்காய் ஆகியவை கடுமையாக விலை உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் ரூ.16-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி நேற்று உழவர் சந்தையில் ரூ.30-க்கும், மற்ற கடைகளில் ரூ.90 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் ரூ.80 முதல் 120 வரையும், ரூ.38-க்கு விற்பனையான கேரட் ரூ.84-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர உருளை கிழங்கு, பீன்ஸ், வெண்டைக்காய், மிளகாய், பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவை விலையும் கணிசமாக உயர்ந்தது. மேலும் மதியத்துக்குள் பெரும்பாலான கடைகளில் காய்கறிகள் முழுவதுமாக விற்று தீர்ந்தன.
பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் தினமும் கிடைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த போதும் ஒரு பாக்கெட் காய்கறிகள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் காய்கறிகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story