ஊட்டியில் தொற்று அதிகரித்து வருவதால், கூடுதலாக 300 படுக்கைகள் தயார்
ஊட்டியில் தொற்று அதிகரித்து வருவதால், கூடுதலாக 300 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தினமும் 350 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை 2,778 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
அரசு மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சை அளிக்கப்படுவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நீலகிரியில் ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 332 படுக்கைகளில் 312 படுக்கைகள் நிரம்பி விட்டன. 20 படுக்கைகள் காலியாக உள்ளது. ஐ.சி.யு. வார்டுகளில் உள்ள 36 படுக்கைகளில் 2 படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளது. 301 சாதாரண படுக்கைகளில் 259 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 42 படுக்கைகள் காலியாக உள்ளது.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 110 படுக்கைகளும் நிரம்பியது. மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள 678 படுக்கைகளில் 469 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 209 படுக்கைகள் காலியாக இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தீட்டுக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளி 200 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாலும், சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் அந்த பள்ளி கூடுதலாக 300 படுக்கை வசதிகளுடன் தயார் செய்யப்பட்டு உள்ளது.
அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு தேவையான படுக்கை, கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story