இன்று முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு; தென்காசியில் கடைகளில் குவிந்த பொதுமக்கள்


இன்று முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு; தென்காசியில் கடைகளில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 May 2021 2:37 AM IST (Updated: 24 May 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

இன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு நேற்று தென்காசியில் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

தென்காசி, மே:
இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஒரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், தென்காசியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

கடைகளில் குவிந்த மக்கள்

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று (திங்கட்கிழமை) முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்துக்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. எனவே பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மளிகை கடைகள், காய்கறி கடைகளில் குவிந்தனர்.
தென்காசி நகரில் காலை 6 மணியில் இருந்தே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் தென்காசி ரத வீதிகள், சுவாமி சன்னதி பஜார், அம்மன் சன்னதி பஜார், கூலக்கடை பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு, மேல ஆவணி மூல வீதி, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள கடைகளுக்கு பொதுமக்கள் திரண்டு வந்து பல்வேறு வகையான பொருட்களையும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதேபோல் கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பஜாரில் குவிந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டும் குறிப்பிட்ட நேரம் வழங்கப்பட்டது. பூக்கடைகளிலும் பூக்கள் விற்பனை களைகட்டியது. அரசு பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அவற்றில் பயணிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணித்தனர். சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
மதியம் 2 மணிக்கு பிறகு பெரிய ஜவுளி கடைகள், நகை கடைகள் போன்றவற்றை அடைக்குமாறு கடைக்காரர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர். தொடர்ந்து அந்த கடைகள் மூடப்பட்டன.

Next Story