ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல் எதிரொலி: சேலத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல் எதிரொலி: சேலத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 24 May 2021 4:04 AM IST (Updated: 24 May 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

ஒரு வாரம் முழு ஊரடங்கு காரணமாக சேலத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம்:
ஒரு வாரம் முழு ஊரடங்கு காரணமாக சேலத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி நேற்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் மட்டுமே அனைத்து கடைகளும் திறந்திருக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மக்கள் கூட்டம்
சேலம் மாநகரில் வர்த்தக கேந்திரமாக விளங்கும் செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட், லீபஜார் ஆகிய பகுதிகளில் நேற்று காலை பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். மேலும் சிறிய வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அங்குள்ள கடைகளில் பொதுமக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஒரு வாரத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல் கடை வீதியிலும் ஜவுளி, நகைக்கடை உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. இதனை அறிந்த பொதுமக்கள் அங்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. இதனால் கடை வீதியிலும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
சமூக இடைவெளியை மறந்தனர்
சேலம் டவுன் திருவள்ளுவர் சிலை அருகே திருமணிமுத்தாறு ஆற்றோர காய்கறி மார்க்கெட்டில் சாலையின் இருபுறங்களிலும் சில்லரை வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதனால் காலையில் பொதுமக்கள் அதிக அளவில் அங்கு திரண்டு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்றனர்.
ஆனால் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் சமூக இடைவெளியை மறந்து முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கி சென்றனர்.
போக்குவரத்து நெரிசல் 
கொரோனா காரணமாக அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உழவர் சந்தைகள் மூடப்பட்டு இருந்தன. இருந்த போதிலும் வெளிப்புறத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடைபெற்றது. பொதுமக்கள் காய்கறி மற்றும் பழங்களை வாங்க அதிக அளவில் திரண்டு வந்து வாங்கிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
அப்போது அங்கு வந்த போலீசார் சமூக இடைவெளியுடன் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இது ஒருபுறம் இருக்க, மாநகரில் உள்ள அனைத்து மளிகை கடைகளிலும் நேற்று காலை முதல் இரவு வரை வியாபாரம் சூடு பிடித்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.
வாகன போக்குவரத்து
இதேபோல் காய்கறி கடைகளிலும் சிறிது நேரத்தில் இருப்பு வைத்திருந்த காய்கறிகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. சேலம் மாநகரில் நேற்று காலையில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கடைவீதி, முதல் அக்ரஹாரம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, பெரமனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று வாகன போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டது.
நேற்று ஒரு நாள் மட்டும் மளிகை மற்றும் காய்கறி கடைகளில் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Next Story