சென்னையில் 200 வார்டுகளில் 2,635 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு; மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தகவல்


சென்னையில் 200 வார்டுகளில் 2,635 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு; மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 4:50 AM IST (Updated: 24 May 2021 4:50 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 200 வார்டுகளில் 2 ஆயிரத்து 635 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய இன்று முதல் ஏற்பாடு செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

2,635 நடமாடும் வாகனங்கள்

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் காய்கறி மற்றும் பழங்களை, நடமாடும் வாகனங்கள் மூலம் வினியோகம் செய்திட வணிகர் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வணிகர் சங்கங்களின் சார்பில் 2 ஆயிரம் வாகனங்கள், தோட்டக்கலை துறையின் சார்பில் 600 வாகனங்கள், கூட்டுறவு சங்கங்களின் சார்பில் 35 வாகனங்கள் என 2 ஆயிரத்து 635 வாகனங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் காய்கனிகள் விற்பனை செய்யப்படவுள்ளன. தேவையின் அடிப்படையில் மண்டல அலுவலரின் ஒருங்கிணைப்புடன் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

காய்கறிகள், பழங்கள் விற்பனை
அனைத்து வார்டுகளிலும் மூன்று சக்கர வாகனம் மற்றும் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யும் வணிகர்கள் சம்மந்தப்பட்ட மண்டல அலுவலரின் அனுமதி பெற்று விற்பனை செய்யவேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்யும் வாகனங்களுக்கு தேவையான பதாகைகள் சென்னை பெருநகர மாநகராட்சியால் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.விற்பனையாளர்களுக்கு மண்டல அலுவலர்கள், மாநகர வருவாய் அலுவலருடன் ஒருங்கிணைந்து தேவையான அனுமதிசீட்டு வழங்கப்படும்.காய்கறிகள் மற்றும் பழங்கள் வினியோகம் செய்யும் விற்பனையாளர்களுக்கு வணிகர் சங்கத்துடன் இணைந்து முககவசம், கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்படும். அனைத்து விற்பனையாளர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இதற்காக கோயம்பேடு வணிக வளாக மையத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் 12 மணி வரை...
நடமாடும் வாகனங்கள் மூலம் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே காய்கனி விற்பனை செய்யப்படும். மேற்குறிப்பிட்ட தள்ளுவண்டிகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையுடன் ரொட்டி, முட்டை மற்றும் பூக்கள் விற்பனையும் செய்யலாம்.மேலும், மின்னணு தளங்கள் மூலமாக காய்கனி விற்பனை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தினசரி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நுகர்வோருக்கு வீடுகளுக்குச் சென்று வினியோகம் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். மேற்கண்ட மின்னணு நிறுவனங்களுக்கு மின்னணு மூலம் வர்த்தகம் மேற்கொள்ள ஏதுவாக காவல்துறை அனுமதி வழங்கப்படும்.இந்த நடமாடும் காய்கனி விற்பனையில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் மாநகராட்சி வருவாய்த்துறை அலுவலர், தோட்டக்கலைத்துறை அலுவலர், கூட்டுறவுத்துறை அலுவலர், காவலர் மற்றும் வணிகர் சங்கங்களின் பிரதிநிதி ஒருவர் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

விலை தகவல்
பொதுமக்கள் நடமாடும் காய்கனி அங்காடி குறித்த வருகை மற்றும் விலை போன்ற தகவல்களை 9499932899 என்ற செல்போன் எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-45680200 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். அதனடிப்படையில் மாநகராட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடமாடும் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் காய்கனிகளின் விலை வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் கண்காணிக்கப்படும். மண்டலங்களில் ஊரடங்கு அமலாக்கக்குழு மூலம் ஊரடங்கை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டும்.எனவே பொதுமக்கள் நலன்கருதி சென்னை மாநகராட்சியின் சார்பில் வணிகர் சங்கத்துடன் இணைந்து 
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் காய்கனி அங்காடிகளின் மூலம் தங்களுக்கு தேவையான அன்றாட காய்கனிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story