கோவை அரசு கல்லூரியில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம்


கோவை அரசு கல்லூரியில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 24 May 2021 6:21 AM IST (Updated: 24 May 2021 6:21 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கோவை

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

கொரோனா சிகிச்சை மையம்

கோவை மாவட்டத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 3,500-ஐ கடந்து விட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. 2-வது அலை தொற்றில் பாதிக்கப்படுபவர்களுக்கு மூச்சுத்திணறல் என்பது மிக அதிகமாக உள்ளது. 

அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஆ க்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 

இதற்கான பணிகள் முடிந்ததை தொடர்ந்து நேற்று இந்த புதிய சிகிச்சை மைய திறப்பு விழா நடைபெற்து. இதற்கு அமைச்சர்கள் அர.சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொரோனா சிகிச்சை மையத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அங்கு ஏற்படுத்தபட்டுள்ள சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் கலெக்டரிடம் கேட்டறிந்தார். அவர், நோயாளிகள், அவர்களின் உறவினர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி  அரசு அதிகாரிகளிடம் கேட்டக் கொண்டார்.

இதையடுத்து அமைச்சர் அர.சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

தமிழக முதல்-அமைச்சர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து டாக்டர்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்டுள்ளார். 

இந்த நிலையில் கிரடாய் அமைப்பின் உதவியுடன் 200 ஆக்சிஜன் படுக்கை வசதி கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

நாளை (இன்று) முதல் தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது, இதை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், தி.மு.க. பொறுப்பாளர்கள் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story