அரசு ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளி பலி பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்


அரசு ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளி பலி பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 24 May 2021 9:24 PM IST (Updated: 24 May 2021 9:24 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அத்துடன் கொரோனா உயிரிழப்புமம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் 24 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெங்களூருவில் அரசு ஆஸ்பத்திரியில் மின்சாரம் தடைபட்டதால் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல், கோலார் மாவட்டம் மாலூரை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கொரோனா பாதித்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வந்ததால், ஆக்சிஜன் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலையில் திடீரென்று ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனடியாக ஜெனரேட்டரை ஊழியர்கள் ஆன் செய்யவில்லை என்று தெரிகிறது.

இதன் காரணமாக சுரேசுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டு துடிதுடித்ததாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார். ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதும், ஜெனரேட்டரை ஊழியர்கள் ஆன் செய்யாமல் அலட்சியமாக இருந்ததால், சுரேசுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிர் இழந்திருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இதனை ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. இந்த சம்பவம் தேவனஹள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story