ஆஷா மருத்துவ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் குமாரசாமி வலியுறுத்தல்
ஆஷா மருத்துவ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் ஆஷா மருத்துவ ஊழியர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. சம்பளத்தை நம்பியுள்ள அவர்களின் வாழ்க்கை மோசமான நிலையில் உள்ளது. கொரோனா முதல் அலையின்போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.3,000 வழங்குவதாக அரசு அறிவித்தது.
ஆனால் அவர்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அந்த ஊக்கத்தொகை கிடைத்தது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டபோது 16 ஊழியர்கள் வைரஸ் தாக்கி இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சம்பளத்தை சரியான முறையில் வழங்காமல் அவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது.
ஆஷா ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறித்த தேதியில் சம்பளம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். உழைப்பவர்களுக்கே உரிய முறையில் சம்பளம் வழங்காத மாநில அரசு, ரூ.1,250 கோடிக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் முறையாக வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.
கொரோனா முன்கள பணியாளர்களாகிய ஆஷா ஊழியர்கள் வைரஸ் தாக்கி இறந்தவர்களில் ஒருவருக்கு மட்டுமே மாநில அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. மீதமுள்ள 15 பேருக்கு இன்னும் அந்த நிவாரண வழங்கவில்லை. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story