ஊரடங்கை மீறிய 229 பேரின் வாகனங்கள் பறிமுதல்


ஊரடங்கை மீறிய 229 பேரின் வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 24 May 2021 9:43 PM IST (Updated: 24 May 2021 9:43 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 229 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கபசுர குடிநீரை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா வழங்கினார்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இதற்காக மாவட்டத்தின் எல்லைகளில் அமைந்துள்ள 11 சோதனை சாவடிகள், 37 முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்த 48 இடங்களிலும் நேற்று அதிகாலை முதல் போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டனர்.


அப்போது வெளியூர்களில் இருந்து இ-பதிவு இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து திரும்ப அனுப்பினர். 

மேலும் மாவட்டத்துக்குள் வாகனங்களில் மருந்து வாங்க சென்றவர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர். 

மேலும் திண்டுக்கல் உள்பட ஒருசில பகுதிகளில் காலையில் சிலர் நடைபயிற்சிக்கு வெளியே வந்தனர். 

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, எச்சரித்து திரும்ப அனுப்பினர்.

அதேநேரம் ஊரடங்கை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றியவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 229 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

அதேபோல் முககவசம் அணியாத 442 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

இதற்கிடையே கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவு, அம்மையநாயக்கனூர், காமலாபுரம் ஆகிய இடங்களில் போலீஸ் சோதனை சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 

அப்போது பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, துப்புரவு பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

Next Story