பெங்களூரு அருகே ஊரடங்கை மீறி சுற்றிய வாலிபர்களுக்கு மாலை அணிவித்து போலீசார் மரியாதை ஆரத்தி எடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்


பெங்களூரு அருகே ஊரடங்கை மீறி சுற்றிய வாலிபர்களுக்கு மாலை அணிவித்து போலீசார் மரியாதை ஆரத்தி எடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 24 May 2021 9:56 PM IST (Updated: 24 May 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே ஊரடங்கை மீறி சுற்றிய வாலிபர்களுக்கு போலீசார் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்ததுடன், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

பெங்களூரு, 

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வருகிற 7-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், தேவையில்லாமல் சுற்றி திரியும் நபர்களிடம் இருந்து வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

அதன்படி, பெங்களூரு புறநகா் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட துமகூரு தேசிய நெடுஞ்சாலை அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தார்கள்.

அதன்படி, தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றிய வாலிபர்கள், பிற வாகன ஓட்டிகளை பிடித்த போலீசார், அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும் வாகன ஓட்டிகளின் நெற்றியில் குங்குமம் வைத்ததுடன், சூடம் பொருத்தி ஆரத்தியும் எடுத்தார்கள். அத்துடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், கொரோனா வேகமாக பரவி வருவதாலும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அதையும் மீறி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், வாலிபர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு போலீசார் மாலை அணிவித்து மரியாதை செய்வது, ஆரத்தி எடுப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story