கர்நாடகத்தில் 2 மாதங்களில் கொரோனாவுக்கு 2,500 இளைஞர்கள் பலி அதிர்ச்சி தகவல்


கர்நாடகத்தில் 2 மாதங்களில் கொரோனாவுக்கு 2,500 இளைஞர்கள் பலி அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 24 May 2021 10:06 PM IST (Updated: 24 May 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு 2,500 இளைஞர்கள் பலியாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் தினசரி சுமார் 30 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கொரோனா முதல் அலையின்போது, உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக இருந்தனர். அப்போது இளைஞர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இறந்தனர். ஆனால் இந்த கொரோனா 2-வது அலை இளைஞர்களை இலக்காக கொண்டு தாக்கி வருகிறது. அதனால் கடந்த மார்ச் 17-ந் தேதி முதல் மே 17-ந் வரை முடிவடைந்த 2 மாத காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் ஆகும். மாநிலத்தில் இதுவரை 14.31 லட்சம் இளைஞர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளளது.

இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 8.57 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு இளைஞர்கள் 2,500 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை 4,488 இளைஞர்களின் உயிர்களை கொரோனா பறித்துள்ளது.

கொரோனா 2-வது அலையில் இஞைர்கள் அதிகளவில் உயிரிழந்து வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இளைஞர்கள் அதிக எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story