நீலகிரி மாவட்டத்தில் 240 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை


நீலகிரி மாவட்டத்தில் 240 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை
x
தினத்தந்தி 24 May 2021 11:01 PM IST (Updated: 24 May 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய 240 வாகனங்களை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய 240 வாகனங்களை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விற்பனைக்கு ஏற்பாடு

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. காய்கறி, பழ, மளிகை கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் நேற்று காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் நடமாடும் வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கி நடமாடும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முழு ஊரடங்கில் பொதுமக்களுக்கு தேவையான பால், மருந்து பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 நீலகிரியில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 35 கிராம ஊராட்சிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, மகளிர் திட்டம், நகராட்சிகள் சார்பில் 240 நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

விலைப்பட்டியல் ஒட்ட வேண்டும்

இந்த வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. காய்கறி தொகுப்பு பைகள் ரூ.50, ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. உழவர் சந்தையில் அதிகாரிகள் நிர்ணயம் செய்யும் விலையில் விற்க வேண்டும். விலைப்பட்டியல் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். 

நிர்ணயம் செய்த விலையை விட அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். கொரோனாவை ஒழிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கிருமிநாசினி, முககவசம் வழங்க வேண்டும்.  கொரோனா விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். நீலகிரி மலை மாவட்டமாக இருப்பதால் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை காய்கறி, பழங்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story